வன் ஈர மண்ணின் நிறத்தைக்கொண்ட கோட் அணிந்திருந்தான். வாடகைக் காரிலிருந்து இறங்கும்போது, அவன் தன் கையில் பைப்பையும் புகையிலை டின்னையும் வைத்திருந்தான். வாடகைக் காரில் அமர்ந்திருக்கும்போதே அவளைப் பார்த்துவிட்டான்.

கேட்டிற்கருகில் கொய்யா மரத்திற்குக்கீழே அவள் நின்றுகொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அவளுடைய முகம் சந்தோஷத்தால் மலர்ந்தது.

அவன் கேட்டிற்கருகில் வந்தபோது, மகிழ்ச்சியுடன் அவள் வரவேற்றாள். "ஷெ...''

"ஷெ...''

Advertisment

அவன் பதிலுக்கு வாழ்த்தினான்.

கேட்டிற்கு அருகிலேயே ஒரு சாய்வு நாற்காலியில் சூரிய குளியல் செய்தவாறு அவளுடைய தந்தை படுத்திருந்தார். ஷெ குவேராவின் பெயரைக் கூறி ஒருவருக்கொருவர் அவர்கள் வாழ்த்திக்கொண்டதைக் கேட்டவுடன், அவர் மெதுவாக சற்று சிரித்தார். தந்தையின் சிரிப்பு அவளின் கண்களில் பட்டது.

அந்த சிரிப்பு அவளைச் சற்று நிலைகுலையச் செய்யாம லில்லை.

Advertisment

அவள் கேட்டாள்: "அப்பா... நீங்க ஏன் சிரிச்சீங்க?''

"நான் சிரிக்கக் கூடாதா?''

"நாங்க "ஷெ'ன்னு சொன்னதைக் கேட்டுதானே சிரிச்சீங்க?''

"மகளே... நீங்க மாவோவையும் ஷெயையும் வெறுமனே விடுங்க. மாடர்ன் ஆர்ட்டும், ஹிப்பிடமும், எல்லெஸ்டியும் உங்களுக்குப் போதாதா? அதை வச்சு நீங்க திருப்தியடைஞ்சா போதாதா?''

"எங்களுக்கு திருப்தின்னு ஒண்ணு விதிக்கப்படல.''

புகையிலை டப்பாவைத் திறந்தவாறு அவன் கூறினான்:

"அப்பா... உங்களுக்கு "ஷெ'ன்னா வெறுப்பு. எனக் குத் தெரியும்.''

"எனக்கு ஷெ மேல வெறுப்பா? லத்தீன் அமெரிக்காவிலும் ஆஃப்ரிக்காவிலும் புரட்சியை விதைச்சு நடந்து, தன்னோட ரத்தத்தை சிந்தி தியாகம் செஞ்ச ஷெ மேல எனக்கு வெறுப்பா பிள்ளைகளே?''

"பிறகு... அப்பா, நீங்க ஏன் சிரிச்சீங்க?''

"புரட்சிங்கறது போலியானதில்ல. மாடர்ன் ஆர்ட்டைப்போல... மாடர்ன் ஆர்ட்டை, தன்னைத் தானே வெளிப் படுத்திக்கறதுன்னு கூறி நீங்க நியாயப் படுத்திக்கிறீங்க. புரட்சியை என்ன பெயர் வச்சு நீங்க அழைக்கப்போறீங்க?''

"உங்ககிட்ட தவறு இருக்கு.''

இதற்குள் அவன் பைப்பிற்குள் புகையிலையைத் திணித்து நிறைத் திருந்தான். பைப்பை வாயில் வைத்துப் பற்றவைத்து, ஒரு புகையை விட்டபிறகு அவன் தொடர்ந்தான்: "மாடர்ன் ஆர்ட்ங்கறது போலி... புரட்சிங்கறது போலி... வாழ்க்கைங்கறது போலி...''

"ஒத்துக்கிறேன் பிள்ளைகளே... ஒத்துக்கிறேன்.''

அவர் நாற்காலியில் மல்லார்ந்து சாய்ந்தபடி கண்களை மூடிப் படுத்தார். "எனக்கு மாடர்ன் ஆர்ட்டும் வேணாம். புரட்சியும் வேணாம். எனக்கு என் வெயில் போதும்.''

பொன் நிறத்திலிருந்த அவருடைய சரீரம் வெயில் பட்டு மெதுவாக சிவக்க ஆரம்பித்தது. வெயிலோ எங்கும் நிறைந்து கிடந்தது.

"ஒரு காலத்தில எனக்கும் விருப்பத்திற்குரியதா இருந்தது.'' வாயிலிருந்து பைப்பை எடுக்காமலே அவன் கூறினான். "ஆரம்பத்தில வெயில் எங்கிட்ட காம உணர்வை உண்டாக்கிச்சு. அப்போ நான் பெண்களைப் பத்தி மட்டுமே சிந்திச்சுக்கிட்டு திரிஞ்சேன். பிறகு....

வெயில் என்கிட்ட புரட்சி பத்திய சிந்தனையை உண்டாக்கிச்சு. என்னோட நரம்புகளுக்கு நெருப்பு வச்சது. அப்போ புரட்சியைப் பத்தி மட்டுமே நான் சிந்திச்சேன். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் திரட்டி, செங்கொடியை ஏந்தி, நகரங்களைக் கைப்பற்றி நான் அடக்குவதைப்போல கனவுகண்டு திரிஞ்சேன்.''

"வெயில் பூர்ஷ்வாக்களின் அடையாளம்.''

"நான் பூர்ஷ்வான்னு நீ சொல்றியா மகளே?''

அவர் கண்களைத் திறக்காமலே கேட்டார்.

"நான் அப்படி சொல்லலியே!''

"காமு கடற்கரையில வெயிலை எதிர்பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருப்பாரு.''

"காமுவுக்கும் சாத்ரிக்குமிடையே பிணக்கத்தை உண்டாக்கினது வெயில்தானே?''

அவளை தோளின் வழியாகக் கையைப்போட்டுப் பற்றி, சரீரத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அவன் வீட்டிற்குள் நுழைந்து சென்றான். அவனுடைய சரீரத்திற்கு புகையிலை, யூடிகொலானின் வாசனை இருந்தது. அவளை கிறுக்குப் பிடிக்க வைக்கும் வாசனை... அறைக்குள் சென்று ஸோஃபாவில் அமர்ந்து, அவன் அவளுடைய தலையை நெஞ்சோடு சேர்த்து வைத்தான். அவளுடைய கூந்தலுக்குள் முகத்தைப் புதைத்தான். அவளுடைய கூந்தல் காற்றில் அவனுடைய தலையைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்தது.

அவனை மூச்சுவிட முடியாமற் செய்தது. ஷாம்புவின் மெல்லிய வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்த அவளுடைய தலைமுடி இழைகள் அவனுடைய கழுத்தைச் சுற்றிக் கட்டின. அவளுடைய முடி நார்கள் அவனுடைய முகத்தில் தவழ்ந்துகொண்டிருந்தன. அவளுடைய தலைமுடி அவனை வலைக்குள் சிக்க வைத்தது.

"என் அறைக்கு ஏதாவது மாற்றம் உண்டாகி யிருக்கா?'' அவள் கேட்டாள். ஒரே பார்வையில் ஷெகுவேராவின் கண்ணாடி போட்டு தொங்க விடப்பட்ட படத்தை அவன் பார்த்துவிட்டான். காடென வளர்ந்திருந்த தலைமுடி... கீழ்நோக்கி வளைந்த நுனிகளைக்கொண்ட மீசை... பற்றியெரியக்கூடிய கண்கள்...

"இது எங்கிருந்து கிடைச்சது?''

"கிடைச்சது... ஒரு இடத்துல இருந்து கிடைச்சது...''

ஏதோ வெளிநாட்டுப் பத்திரிகையிலிருந்து கிழித்தெடுத்த தாள்...

"ஸிரோபஸ்டோஸின் படமும் இருக்கு. பார்க்கணுமா?''

அவள் எழுந்து மேஜையை நோக்கி நடந்தாள். ஆல்பத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் எப்போதும் காட்டக்கூடிய... அவன் எப்போதும் பார்க்கக்கூடிய ஆல்பத்தின் தாள்களில் ஹெய்டக்கர், காஃப்கா, ஜஜுஹான்டோ ஆகியோரின் படங்களுக்கு மத்தியில் ஸிரோபஸ்டோஸ். தெப்ரே, ஜார்ஜ் மஸ்ஸேட்டி ஆகிய புரட்சியாளர்களின் பற்றியெரியும் கண்களை அவன் பார்த்தான். அவன் கேட்டான்:

"ஷெயும், தெப்ரேயும், ஸிரோபஸ்டோஸும், ஜார்ஜ் மஸ்ஸேட்டியும், ரிக்கார்டோ ரோஜோவும் உன்னை கல்யாணம் செஞ்சுக்க விரும்பறாங்க. நீ யாரை ஏத்துக்குவ?''

"கேட்கணுமா?''

"மஸ்ஸேட்டியை?''

அவள் "ஆமாம்' என்று தலையைக் குலுக்கினாள்.

ஜார்ஜ் மஸ்ஸேட்டி இளைஞனாக இருந்தான். அழகானவனாக இருந்தான். பத்திரிகை செயல் பாட்டாளராக இருந்தான். யூட்டோவில் சூறாவளிக் காற்றின் கடுமைக்குள் லத்தீன் அமெரிக்காவை கனவு கண்டுகொண்டு மஸ்ஸேட்டி நிரந்தரமாக உறங்கிக்கொண்டிருக்கிறான். ஜார்ஜ் மஸ்ஸேட்டி என்ற புரட்சியாளனை அவள் காதலித்தாள்.

ss1

அவள் காதலிக்க ஆரம்பித்தது- மஸ்ஸேட்டி ரத்தத்தைச் சிந்தி தியாகியானபிறகு...

"சாருமஜும்தாரையும் நாகிரெட்டியையும் உன்னால காதலிக்க முடியுமா?''

"முடியாது.''

"மார்ட்டின் லூதர்கிங்கை?''

"முடியாது.''

"ராபர்ட் கென்னடியை?''

"முடியாது.''

"ஜெனரல் டிகாலை?''

"முடியாது.''

அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அவளுடைய கனிவு நிறைந்த கண்களில் சிரிப்பு, விளக்கைப் பற்றவைத்தது. அவளுடைய கண்கள் பிரகாசித்தன.

அவள் வெப்பமும் வெளிச்சமும் தரக்கூடிய விளக்காக மாறி பற்றி எரிந்தாள்.

"நேத்தும் நேத்தைக்கு முந்தைய நாளும் நான் எங்கேயிருந்தேன்னு நீ கேட்கலையே? நீ தெரிஞ்சுக்க வேணாமா?''

"நேத்தைக்கு முந்தைய நாள் முகர்ஜியோட ஹாஸ்டல்ல இருந்தீங்க. அப்படித்தானே? எனக்குத் தெரியும்.''

"எப்படித் தெரியும்?''

"நான் விசாரிச்சிக்கிட்டு திரிஞ்சேன்.''

"ஹாஸ்டல்ல இருக்கேன்ற தகவல் தெரிஞ்சதும் தேடுறதை நிறுத்திட்டியா?''

முகர்ஜியின் ஹாஸ்டலுக்குச் சென்றால், சுய உணர்வை இழந்துதான் திரும்பிவர வேண்டியதிருக்கும். அவளுக்கு அது தெரியுமே!

"யாரெல்லாம் இருந்தாங்க?''

"முகர்ஜியும் தயாளும் நானும்...''

ஃப்ரான்ஸில் மாணவர்களின் புரட்சிதான் விஷயம்... ஸ்காட்ச் விஸ்கிக்கு முன்னால் அமர்ந்து பேராசிரியர் மார்க்யூஸைப் பற்றி பேசினார்கள். மாவோவும் ஷெயும் ரூடி, டேனியல் கான்ப்ரென்டிட் ஆகியோரின் நரம்புகளுக்கு நெருப்பு வைத்தார்கள். பேராசிரியர் மார்க்யூஸ் அவர்களுடைய மூளைக்கு உணவு கொடுத்தார். மார்க்யூஸின் "யுனி டைமன்ஷனல் மேனி'லிருந்து முகர்ஜி மேற்கோள்களைக் கூறினார். மார்க்யூஸை மார்க்ஸ்ஃப்ராய்ட் என்று சிறப்பித்துக் கூறினார். நள்ளிரவு வேளை தாண்டியபிறகு, சுய உணர்வை இழந்து உறங்கினார்கள். காலையில் எழுந்து, ஆடையிலிருந்த தூசியைத் தட்டிவிட்டு, அலுவலகத்திற்குச் சென்றார்கள்.

"நேத்து எங்க போயிருந்தீங்க? நேத்தே என்னைத் தேடி அலையலியா?''

"இல்ல...''

"என்மேல கோபம் இருந்ததா?''

அவள் அவனுடைய கை விரல்களைக் கோர்த்துப் பற்றினாள்.

"நேத்து அலுவலகத்திலிருந்து வர்றப்போ, மிஸஸ் ஜாஃப்ரியைப் பார்த்தேன்.''

"ஆர்ட் பிரிவின் ரஸியா ஜாஃப்ரியையா?''

"அவள் என்னோட வந்தாள். ஒம்பது மணிவரை பேசிக்கிட்டிருந்தோம்.''

"என்ன பேசினீங்க?''

"அவள் அவளோட ஆராய்ச்சியைப் பத்தி... நான் என்னோட மரணத்தைப் பத்தி... நாங்க ஒண்ணா உட்கார்ந்து இரவு உணவு சாப்பிட்டோம்.''

"பிறகு..?''

"அவளோட சேர்ந்து படுத்தேன்.''

"காலையிலதான் போனாளா?''

"பதினொரு மணிக்கு போனா. இரவு...''

"வீடுவரை கூட போனீங்களா?''

"வாடகைக் கார்ல ஏத்தி, விடைகொடுத்து அனுப்பினேன். நீ என்ன செஞ்ச?''

"நேத்து தயாளின் தம்பியைப் பார்க்கறதுக்காக போனேன். அவன் மஸ்ஸேரியின் ஒரு புகைப்படத்தைத் தர்றதா சொல்லியிருந்தான்.''

"அந்த தாடிக்காரனா? புகைப்படம் கிடைச்சதா?''

"இல்ல... அவன் என்னை ஏமாத்திட்டான்.''

"பிறகு....?''

"திரும்பி வந்துட்டேன்.''

"அவன் உன்னை சினிமாவுக்கு அழைக்கலையா?''

"நான் போகல.''

"உன்கூட சேர்ந்து படுக்கணும்னு அவன் சொல்ல லியா?''

அவள் பேசவில்லை.

அவன் அவளின் கையை எடுத்து மடியில் வைத்து, அதன்மீது தடவிக்கொண்டிருந்தான்.

சிறிதுநேரம் சென்றதும் அவர்கள் அறையை விட்டு வெளியே வந்தார்கள். அவளுடைய தந்தை இப்போதும் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தார். அவர் செம்பருத்தியைப்போல சிவந்துவிட்டார். அதற்குப் பிறகும் வெயிலின்மீது உள்ள ஆசை தீரவில்லை.

"பயணம் எங்க?''

இருவரும் வெளியே செல்லத் தொடங்குவதைப் பார்த்து அவர் கேட்டார்.

"நடக்க...''

"போரடிக்குது...''

"இந்த நடு உச்சிப் பொழுதிலா? ஆளுக்கொரு நாற்காலிய எடுத்துக்கிட்டு வந்து இங்க உட்காருங்க. நான் கதை சொல்றேன். "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' கதை...''

"நாங்க நடக்கணும்... அப்பா. நடந்தே ஆகணும்...''

"கட்டாயம்னா போங்க. வெயிலோட காதுல நான் என் கதைகளைக் கூறி முடிக்கறேன்.''

அவன் பைப்பை அணைத்து, கோட்டின் பைக்குள் வைத்தான். கேட்டைத் திறந்து, ஒருவரையொருவர் கைகோர்த்துப் பிடித்தவாறு நடந்தார்கள்.

பூமியின்மீது அவர்கள் நடந்தார்கள். ஹிப்பிகள், தலைமுடியை வளர்த்திருக்கும் ஓவியர்கள், கோஷங் கள் எழுப்பும் மாணவர்கள் ஆகியோரால் பூமி நிறைந்திருந்தது.

கையில் கையுடன் நடந்தார்கள்.